Chemical இல்லாமல் வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே clean செய்வது எப்படி ?
நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்படுத்தப்படுவது வெள்ளிதான். அரைஞாண் கயிறு, கொலுசு, மெட்டி என குழந்தை பிறந்ததிலிருந்து ஒட்டி உறவாடும் இந்த வெள்ளி நகைகளை எப்படி பராமரிப்பது..?
தங்கத்திலிருக்கும் ‘ஹால்மார்க்’ மாதிரியான முழு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் பொதுவான முத்திரைகள், வெள்ளி நகைகளுக்கு இல்லை. ஆகையால், அவற்றை நம்பிக்கையான கடைகளில் வாங்குவது நல்லது.
வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் நகைகளை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் அவை கறுப்பாக மாறி விடுகின்றன. அதற்காக வெள்ளியின் தரத்தில் குறை இருப்பதாக எண்ண வேண்டாம். ஒவ்வொரு முறை வெள்ளி பாத்திரங்களை உபயோகித்த பின் காற்று படுவதால் கருத்துவிடுகிறது.
கடைகளில் ஒவ்வொரு முறை polish க்கு கொடுத்தாலும் அதன் எடை குறைந்து விடுகிறது. அதனால் வீட்டிலேயே எவ்வாறு பள பளவென வெள்ளி பாத்திரங்கள் மின்னும் படியாக சுத்தம் செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பட்டு புடவையை பராமரிக்க உபயோகித்த பூந்தி கொட்டையை பயன்படுத்தி எளிதில் வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்யலாம்.
பூந்திக்கொட்டையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின் காலையில் உபயோகித்தால் அதிக நுரை கிடைக்கும். இந்த ஊற வைத்த பூந்திக்கொட்டையை மிக்ஸியில் அரைத்து அந்த ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து கலக்கவும். நிறைய வெள்ளிபாத்திரம் இருந்தால் இதனை உபயோகிப்பது நன்று.
சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளிபாத்திரத்தை பூந்திக்கொட்டை தண்ணீரில் ஒரு மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும்.
ஊறும் போது பத்து நிமிடத்துக்கு ஒரு முறை வெளியே எடுத்து scrub செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரமாவது நன்கு ஊற வைத்து தேய்த்த பின் ஒரு முறை சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப்பினை வைத்து வெள்ளி பாத்திரங்களை தேய்க்கவும்.
நன்கு சோப்பினால் தேய்த்து அலசியபின் சுத்தமான தண்ணீரில் கழுவி எடுக்கவும். விபூதி (திருநீறு) கொண்டு வெள்ளி பாத்திரத்தை அழுத்தி துடைத்தால் வெள்ளி பளபளவென்று மின்னும்.
வெள்ளிப் பொருட்களை பராமரிக்க உங்களுக்காக சில டிப்ஸ் :
1. வெள்ளித் தட்டுகளில் உணவுகளை நீண்ட நேரம் வைக்க வேண்டாம். ஏனெனில் சில உணவுப் பொருட்களில் உள்ள அமிலங்கள் வெள்ளித்தட்டை மங்கச் செய்யும்.
2. பாத்திரம் கழுவும் மெஷின்களில் வெள்ளிப் பாத்திரங்களைப் போட வேண்டாம்.
3. வெள்ளியை குளிர்ச்சியான, வறண்ட இடங்களில், காற்றுபுகாத பெட்டிகளில் வைக்கவேண்டும். நீண்ட நேரங்களுக்கு அதை வெளியில் வைக்க வேண்டாம்.
4. மரப்பெட்டிகளில் வெள்ளிப் பொருட்களை வைப்பது நல்லது. அவ்வாறு ஸ்டீல் பீரோவில் வைப்பதனால் நியூஸ் பேப்பர் அல்லாத மற்ற பேப்பர்களிலோ அல்லது பிரவுன் கலர் கவர்களிலும் சுற்றி வைக்கலாம். பாலித்தீன் கவரில் போட்டு காற்று புகாதவாறு நன்கு மூடி வைக்கலாம்.
5. நகைப்பெட்டிகளில் ஒவ்வொரு நகைகளையும் தனித்தனியாக வையுங்கள். வெள்ளியின் மீது செய்தித்தாளோ, ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொருட்களோ படும்படி வைக்க வேண்டாம்.
6. வெள்ளிப்பொருட்களை சுத்தம் செய்வதற்கு மென்மையான sponge / cotton துணிகளை பயன்படுத்த வேண்டும்.
7. தயிர், எலுமிச்சம் பழம் போன்றவையும்கூட, அழுக்கை சுத்தமாக நீக்கும். ஆனால், இவற்றை அடிக்கடி உபயோகித்தால், அவற்றில் உள்ள அமிலம் வேதி வினைபுரிந்து, வெள்ளியைக் கரைக்கக்கூடும்.
8. வெள்ளி, நொடியில் பளபளக்க வேண்டுமா…? வீட்டில்இருக்கும் மென்மையான திருநீறைப் போட்டு மெள்ளத் தேய்த்தால்… விரும்பிய ரிசல்ட் கிடைக்கும்.
Comments
Post a Comment