உடல் அசதியைப் போக்க ஓர் மருந்து ரசம் தயார்!
இந்த கோடை விடுமுறை நாட்களில் ஊரெல்லாம் சுற்றி
களைத்து போய் இருக்கிறீர்களா?
உற்சாகமான உடலும், குதூகலமான மனமும் வாழ்க்கையை பிடிப்புடனும், நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்திட மிக முக்கியமானதாகும். இவற்றை சிதைக்கும் வகையில் அலுப்பும், சோர்வும் நம் உடல் மற்றும் மனதின் நோய்களாக இருக்கின்றன.
இந்த அலுப்பு மற்றும் சோர்வே இன்றைய அவசர உலகில் பலரையும் மனம் பிடிப்பில்லாமல் இறுக்கத்தோடு இயங்க வைக்கிறது. "என்னமோ தெரியல டாக்டர். காலையில் எழுந்திருக்கும்போதே உடம்பெல்லாம் குடையற மாதிரி இருக்கு... " என்று பெண்கள் பலர் புலம்பக் கேட்கலாம். அதே போல் அலுவலகம் முடித்து வரும் ஆண்களிடம் கடைக்குப் போகச் சொன்னால் "ஏண்டி! படுத்தற... நானே நொந்து நூடுல்ஸாகி வந்திருக்கேன். மனுஷனை வீட்ல நிம்மதியாவே இருக்க விட மாட்டியா?" என அலுத்துக்கொள்ளும் ஆண்களையும் பார்க்க முடிகிறது.
எப்படி இந்த சோர்வு மற்றும் அலுப்பிலிருந்து வெளிவருவது.
இதோ உங்கள் உடல் அசதியைப் போக்குவதற்கு ஒரு சுவையான ரசம் தயார்! இதை எங்கள் வீட்டில் மருந்து ரசம் என்போம். வாங்க பார்க்கலாம்.
இந்த மருந்து போடி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
அரிசி திப்பிலி (Long Pepper) - 10 gm
கண்டதிப்பிலி (Long Pepper Root) - 10 gm
மிளகு (Black pepper) - 10 gm
சீரகம் (Cumin Seeds / Jeera) - 10 gm
கசகசா (Poppy Seeds) - 5 gm
கிராம்பு (Clove) - 4 Nos.
ஏலக்காய் (Elaichi) - 1No.
மேற்கண்ட பொருட்களை அடி கனமான வாணலியில் இட்டு எண்ணெய் ஊற்றாமல் dry ஆக தனித்தனியே வறுக்க வேண்டும். சூடு ஆறிய பின் அதனை ஒன்றாக மிக்ஸியியில் போட்டு நன்கு பொடி செய்து ஒரு container ல் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
நாம் வீட்டில் எப்போதும் தக்காளி ரசம் வைப்பது போலவே புளி, சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து ரசத்தை வைக்க வேண்டும். பின்னர் பருப்பு தண்ணீர் விட்டு விளாவி பொங்கியபின் இறக்கி வைக்க வேண்டும்.
மணமணக்கும் அருமையான மருந்து ரசம் தயார். இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது அப்படியே சூப் போலவும் குடிக்கலாம்.
பின்குறிப்பு :
- உங்களது சுவைக்கேற்ப மிளகு, கிராம்பு அளவை சேர்த்துக் கொள்ளலாம்.
- கசகசா அதிகமாக சேர்த்தால் தூக்கம் வரும்.
- இந்த ரசப்பொடியை நாம் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
உடல் சோர்வை போக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் கூட தெளிந்த மனமும், அக்கறை, அன்பு, பாசம் என உறவின் வெளிப்பாடுகளும்தான் அலுப்பு, சோர்வை நீக்கும் முக்கிய மருந்துகள்.
" நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் "
Comments
Post a Comment