கோபமாக உள்ள உங்க குழந்தையை கையாள சூப்பர் டிப்ஸ்!


இன்றைய நவீன கணிப்பொறி உலகில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினருக்கும் ஒரு பொதுவான வியாதி "கோபம்".  அதில் குழந்தைகளுக்கு எளிதில் கோபம் வந்துவிடுகிறது. இதனை எப்படிப்  புரிந்துகொள்வது? எப்படி சமாளிப்பது?

உங்க குழந்தையின் கோபத்தைக் கையாள சூப்பர் டிப்ஸ்!

இன்றைய சூழலில்  சிறிய வயது குழந்தைகூட,  கோபம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தத்தொடங்கிவிட்டது. 

சாப்பிட,  தூங்க,  தனக்கு விருப்பமில்லாத விஷயத்தை பெற்றோர் புகுத்தும்போதோ,  தன்னுடைய விருப்பம் நிறைவேறாமல் போனாலோ அல்லது தாமதமானாலும்கூட, படிக்க தன்னை வற்புறுத்துவதுபோல உணரும்போதோ,  இக்கால  குழந்தைகளுக்கு சட்டென கோபம் வந்துவிடுகிறது. 

அதிகமாக  அழுது புரண்டு, கத்தி, சில சமயங்களில் கையில் உள்ள பொருட்களைப் போட்டு உடைத்தும் குழந்தைகள்  தனது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  இதை பெற்றோர் உடனே கவனிக்காமல் , ’குழந்தைதானே, செய்துவிட்டு போகட்டும்’ என்று விட்டுவிடக் கூடாது. அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இது கவனித்து மாற்றவேண்டிய ஒரு குணாதிசயம்.



இந்த பதிவின் மூலம்  நாம்  ஏன் கோபம் வருகிறது என்பதற்கான மூல காரணங்களையும், கோபமான மனநிலையில் உள்ள குழந்தைகளை எவ்வாறு கையாளலாம் மேலும் இதற்கான நிரந்தரத் தீர்வுகள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

கோபமும் காரணமும் : 
குழந்தைகளுக்கு சிலபல காரணங்களினால் மட்டும் கோபம் வருவதில்லை.  எந்தவொரு காரணமும் இல்லாமலேயே கோபம் வருகிறது இக்கால கண்மணிகளுக்கு. குறிப்பாக, பசி அதிகமானாலும்கூட, அதுவும் கோபமாக வெளிப்படலாம். போதிய தூக்கம் இல்லாமல் போவது கூட  கோபம் வர காரணமாகிறது.

தம்முடைய பெற்றோர்கள் எப்போதும் தம்மையே கவனிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு பெரும்பாலான குழந்தைகளிடம் உண்டு.  இதுவே, "கவன ஈர்ப்புச் செயல்" எனப்படுகிறது.  அதாவது, ’பெற்றோர் என்னைக் கவனிக்கத் தவறி மற்ற விஷயங்களில் (புதிதாகப் பிறந்துள்ள தம்பி, தங்கை, ஆபீஸ் வேலை, குடும்ப வேலை) கவனம் செலுத்துகிறார்களோ’ என்று குழந்தைகள் சில ஏங்கும். அந்த ஏக்கத்தில் கத்துதல்,  எதையாவது கேட்டு  அடம் செய்து அழுதல் போன்ற செயல்கள் மூலம் கவன ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது. இது ஒருவித மறைமுக கோப உணர்வு!

சாதாரணமாக நம் இந்திய வீடுகளில் முதலில் பிறக்கும் பேரக்குழந்தை/முதல் பெண் குழந்தைகளுக்கு பெரியவர்கள் அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பர். இதுவே அக்குழந்தைக்கு சாதகமாகி தான் எது கேட்டாலும், தான் எந்நேரமும் எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் கத்தி அடம் பண்ணலாம் என்று நம்பும் குழந்தை மற்றொரு வகை.

ஒருசில குழந்தைகள் உடல்நிலை சரியில்லை என்றால் அதை கோபத்தின் மூலமே வெளிப்படுத்தும். காயம், விளக்கமுடியாத வலி போன்றவற்றால் அவதிப்படும்போதும் கோபப்பட்டு கத்துவார்கள். இதையும் கூர்ந்து கவனித்து, புரிந்துகொண்டு பெற்றோர் செயல்படவேண்டும்.  தங்களையும் அறியாமல் கோபப்பட்டுவிட்டு, பின் மன்னிப்பு கேட்கும் குழந்தைகளும் உண்டு

கையாளும் முறைகள்...

  • பெற்றோர்கள் முதலில் கோபத்திற்கான காரணத்தை கண்டறிந்து நிதானமாக எடுத்து சொல்லி அதை சரி செய்ய வேண்டும்.
  • குழந்தைகள் கத்துவதைக் கண்டு பயந்து பதற்றமாகி உடனே அவர்கள் கேட்பதை கொடுக்கும் பழக்கத்தை வளர்க்க கூடாது. அது அவர்களின் பிடிவாத குணத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும்.
  • முன்பே குழந்தைகளின் தேவையறிந்து அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வது பெற்றோரின் கடமையாகும்.
  • குழந்தைகள் கத்தி அடம் பிடிக்கும் போது, பெற்றோரும் டென்ஷனாகி கத்துவதை தவிர்க்க வேண்டும். நிதானமாக அவர்களை அணுக வேண்டும்.
  • நீ இவ்வாறு செய்யும் பிள்ளை இல்லையே! நீ சமத்து குழந்தையாச்சே போன்ற எளிமையான, ஊக்கமூட்டும் பேச்சுக்கள். சட்டென்று அவர்களுக்குப் பிடித்த உணவு, டிவி ஷோ, விளாயாட்டுப் பொருட்களில் கவனத்தை திசை திருப்புதல். 
  • ’நீ இப்படிக் கோபப்பட்டு நடந்துகொள்வதால், பாரு! அம்மாவுக்குக் கவலையில தலைவலி வந்துடுச்சு. ஜுரம் வரப்போகுது, தொண்டை வலிக்குது... நானும் ஜுரத்துல படுத்துட்டா உன்னை யார் பார்த்துக்குவாங்க?’ என்று கூறி, பிள்ளைக்கு உங்கள் சிரமத்தை, தேவையைப் புரிய வைக்கலாம்.
  • ’புது தம்பிப் பாப்பா வந்தாலும், நீதான் எங்களுக்கு மிக முக்கியம்’ என்று அடிக்கடி சொல்லி, அதனை அவர்கள் மனதில் பதிய வைக்கலாம்.
  • சிறிய அளவில் எச்சரிக்கை தரலாம். இதன்மூலம் உன் தேவையை நீ பெற முடியாது என்பதுபோல!
  • பிள்ளை கோபப்பட்டு அழும்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதுதான்! அழுது புரள்வதைப் பார்க்க ஆள் இருக்கிறது என்ற எண்ணமே அவர்களின் அடத்தை அதிகரிக்கும்.

நிரந்தரத் தீர்வுகள் சில...
  • கோபப்பட்டால் ஏற்படும் விளைவுகளை, குழந்தை நல்ல மனநிலையில் இருக்கும்போது நிதானமாக, கலகலப்பாக விளக்கலாம்.
  • கண்டிப்பாக எந்த ஒரு பிரச்சனையையும், குழந்தையின் முன் கடுமையான வார்த்தைகள் பேசி விவாதிப்பதை அறவே விடவேண்டும்.
  • கோபத்தைக் கட்டுபடுத்த பெற்றோர் முயலும்போது, தாத்தா, பாட்டி, உறவினர் தலையீடு இருக்கக் கூடாது.
  • அந்தச் செய்கையை ரசிக்கவோ ஊக்குவிக்கவோ வேண்டாம்.
  • ’இவன் கோபக்காரன், அவளுக்குக் கோபம் வந்தா அவ்வளவுதான்’ என்பன போன்ற விமர்சனங்களைத் தவிர்க்கவும்.
  • அடிப்பதோ தண்டிப்பதோ பலன் தராது.
  • அவர்களின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டாலும், நாளடைவில் அந்த ஆயுதத்தை அவர்கள் விட்டுவிட வாய்ப்புண்டு.
  • கோபித்தால் காரியம் கை கூடாது என்று அவன் / அவள் உணரட்டும்.
  • அதிகம் கோபப்படும் குழந்தைகளுக்கு மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவை மாற்றம் தரும். 
  • ஏதேனும் குறிப்பிட்ட வன்முறை மிகுந்த டிவி தொடர்களை, குழந்தைகள் உன்னிப்பாகப் பார்க்கிறார்களா என்பதைக் கண்காணித்து, அதிலிருந்து அவர்களை திசை திருப்பவும்.
  • அவர்களுடைய இதுபோன்ற தகாத செய்கைகளைப் பெரிதுபடுத்துவதை விட, அவர்களிடம் தென்படும் நல்ல குணங்களை அதிகமாகப் பாராட்டிப் பேசும்போது, நாளடைவில் கோப குணத்தை விட்டுவிடுவர்.
  • உங்கள் குழந்தைகளின் நண்பர்களையும் கண்காணிக்கலாம். அவர்களில் எவரிடமிருந்தும் கூட இந்த அதீத கோப குணம் வந்திருக்கலாம்.

பெற்றோர்களே! யோசியுங்கள்....
உங்களின் குழந்தைகளை கையாளும் முறைகளில்
 மாற்று வழிகளை மேற்கொள்ளுங்கள்.  
அமைதியான, சந்தோஷமான குடும்பத்தை 
உருவாக்க  திறன் மிகுந்த பெற்றோராக விளங்கிட... 
வாழ்த்துக்கள்!! 

Comments

Popular posts from this blog

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த எளிய வழி...

Chemical இல்லாமல் வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே clean செய்வது எப்படி ?

Trick to memorize 9th Table Easily...